×

தமிழகத்தின் பல்வேறு பிரச்னைகளை விவாதிக்க பேரவைக் கூட்டத்தை நீட்டிக்க வேண்டும் : ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கை:காவிரி சிக்கல் மட்டுமின்றி, கஜா புயல் பாதிப்புகள், ஸ்டெர்லைட் ஆலை விவகாரம் உள்ளிட்ட தமிழக நலன் சார்ந்த ஏராளமான பிரச்னைகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட வேண்டியுள்ள நிலையில், சில மணி நேரங்கள் மட்டும் பேரவையின் சிறப்புக் கூட்டத்தை நடத்துவதால் எந்தப் பயனும் ஏற்படப் போவதில்லை. தமிழகத்தின் தலையாய பிரச்னைகள் குறித்து 4 மணி நேரத்தில் எத்தகைய விவாதங்களை நடத்த முடியும்? கஜா புயல் தாக்குதலால் காவிரி பாசன மாவட்டங்களை பார்வையிட பிரதமர் இன்னும் வரவில்லை. மத்திய அரசு இதுவரை ஒரு பைசா கூட நிதி உதவி வழங்கவில்லை. ரூ.353 கோடியை பேரிடர் நிவாரண நிதியாக மட்டுமே மத்திய அரசு வழங்கியுள்ளது. இந்த அநீதி குறித்து சட்டப்பேரவைக் கூட்டத்தில் விவாதிக்காமல் இருக்க முடியுமா?

மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்கப்படுவதை தடுக்க இப்போதும் வாய்ப்புகள் உள்ளன. ஒன்று தமிழகத்தில் தாமிர உருக்காலைகளை அனுமதிப்பதில்லை என்று அமைச்சரவைக் கூட்டத்தில் கொள்கை முடிவு எடுத்து அறிவிப்பதாகும். இரண்டாவது, தமிழகத்தில் தாமிர உருக்காலைகளுக்கு தடை விதித்து தொழிற்சாலைகள் சட்டத்தில் உரிய திருத்தங்களை செய்வது ஆகும். எனவே பேரவையின் சிறப்புக் கூட்டத்தில் இதுகுறித்து விவாதித்து சட்டத் திருத்தத்தை நிறைவேற்ற முடியும்.
எனவே, தமிழக சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டத்தை மேலும் சில நாட்களுக்கு நீட்டிக்க வேண்டும். மேகதாது அணை விவகாரம், கஜா புயல் பாதிப்புகள், ஸ்டெர்லைட் ஆலை விவகாரம், சென்னை-சேலம் எட்டுவழிச் சாலை உள்ளிட்ட சிக்கல்கள் குறித்து விரிவான விவாதம் நடத்தப்பட வேண்டும். அதன் நிறைவாக உரிய தீர்மானங்கள்- சட்டங்களை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Congregation Meeting ,Ramadoss ,Tamil Nadu , Meeting should be extended , discuss various issues in Tamil Nadu, Ramadoss's assertion
× RELATED ராமதாஸ் வலியுறுத்தல் மரம் நடுவதை மாபெரும் இயக்கமாக்க வேண்டும்